web
stats
View Visitor Stats தமிழக விவசாயிகளுக்காக அமெரிக்காவில் தொடர்ந்து போராடும் தமிழர்கள்! – VethaTV
You are here
Home > உலக செய்திகள் > தமிழக விவசாயிகளுக்காக அமெரிக்காவில் தொடர்ந்து போராடும் தமிழர்கள்!

தமிழக விவசாயிகளுக்காக அமெரிக்காவில் தொடர்ந்து போராடும் தமிழர்கள்!

வாஷிங்டன்(யு.எஸ்): முன்னெப்போதும் காணாத அளவுக்கு அமெரிக்கத் தமிழர்களிடம் இன உணர்வும், தமிழக விவசாயிகள் மீதான அக்கறையும் காணப்படுகிறது.

ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் நாட்டின மாடுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டனர்.

இந்த போராட்டங்களுக்காக உள்ளூர் மட்ட அளவில் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்கள் உருவாக்கப் பட்டன. ஜல்லிக்கட்டு போராட்டங்கள் முடிவுக்கு வந்த பிறகு, அந்த குழுக்கள் தமிழக நலன்களுக்காக மாற்றி அமைக்கப்பட்டன.

பெரும்பாலும் இத்தகைய குழுக்களில் முப்பது முதல் நாற்பது வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களில் ஹெச்1 விசாவில் இருப்பவர்களும் ஏராளம்.

இந்த இளைஞர்கள் நாளைய தங்கள் அமெரிக்க எதிர்காலத்தை பற்றிய சிந்தனையை தனியே வைத்துவிட்டு, தமிழக விவசாயிகளுக்காக உணர்வுப் பூர்வமாக செயல்படுவதைக் காண முடிகிறது. பெண்களின் பங்களிப்பும் பெருமளவில் இருக்கிறது.

கவிதா பாண்டியன் என்ற இளம் பெண் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக அமெரிக்காவிலிருந்து, கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிணிக் கல்வி,கைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி விற்பனைக்கான உதவி, ஜல்லிக்கட்டு போராட்டம், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி உட்பட பல்வேறு பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறார்.

நெடுவாசல் போராட்டங்கள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, அமெரிக்காவிலும் ஆதரவு பெருகியது.

அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுமார் 200 பேர் ஒன்று திரண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்.

பெருந்திரளாக வந்திருந்த பெண்கள் நாட்டுப்புற பாடலாக, தங்கள் ஆதரவுக் கருத்துக்களை பாடியது வியப்பூட்டியது.

அரிசோனா மாநிலத்தின் ஃபீனிக்ஸ் மாநகரத்தின் ஸ்காட்டேல் பகுதியில் சுமார் 100 பேர் குடும்பத்துடன் திரண்டு நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஹூஸ்டன் நகரில் பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் நேரிடையாகவே எதிர்ப்பு தெரிவித்து நீண்ட மனுவை தமிழர்கள் வழங்கியிருந்ததை ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்.

தமிழகத்தில் தற்காலிகமாக நெடுவாசல் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டத்தை தொடர்ந்து, அமெரிக்காவில் அடுத்தடுத்து நடைபெறவிருந்த ஆதரவுப் போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு எதிராக நடக்கும் இலங்கை ராணுவத்தின் வன்முறைக்கு எதிராகவும் அமெரிக்க தமிழர்கள் மத்தியில் குரல்கள் எழுந்துள்ளன.

தொடரும் தமிழக விவசாயிகள் ஆதரவு களப்பணிகள்

தமிழகத்தில் வறட்சியாலும் கடன் தொல்லையாலும் உயிரிழந்த விவசாயக் குடும்பங்களுக்கு ஆதரவாகவும், தற்கொலை எண்ணத்தை தடுக்கவும் அமெரிக்கத் தமிழர்கள் திட்டங்கள் தீட்டி, களப்பணியாற்றி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மற்றும் பயிறுவகைகள், உள்ளிட்ட உடனடி நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வித் தொகை உதவியும் செய்து வருகிறார்கள்.

தொடர்ச்சியாக, உடனடி நிவாரணப் பொருட்கள், கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நீண்ட கால திட்டமாக இயற்கை விவசாயத்திற்கு மாற்றம், நீர் மேலாண்மை, குடும்பத்திற்கு ஒரு நாட்டின பசு மாடு, வேளாண்பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வழிமுறைகள், வானிலையை துல்லியமாக கணித்து, விவசாயிகள் முன் கூட்டியே திட்டமிடுவதற்கான தொழில் நுட்ப கட்டமைப்பு போன்றவற்றிற்கும் இந்த இளைஞர் குழு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top