web
stats
View Visitor Stats வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி:விராட் கோலிக்கு கை கொடுத்த தோனியின் ஆலோசனை – VethaTV
You are here
Home > விளையாட்டு > Cricket > வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி:விராட் கோலிக்கு கை கொடுத்த தோனியின் ஆலோசனை

வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி:விராட் கோலிக்கு கை கொடுத்த தோனியின் ஆலோசனை

பர்கிங்காம்,

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியும் வங்காளதேச அணியும் மோதின. இந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை பந்தாடிய இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக நுழைந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை (18 ஆம் தேதி) நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

முன்னதாக நேற்று நடைபெற்ற இந்தியா -வங்காளதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி முதலில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. 28 ஓவர்களில் வங்காளதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. அப்போது, தமிம் இக்பால் – முஷ்புகிர் ரகீம் ஜோடி களத்தில் நின்றது. இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போது, கேதர் ஜாதவ் சுழலில் சிக்கியது.

121 ரன்கள் சேர்த்து இருந்த இந்த இணைக்கு கேதர் ஜாதவ் முற்றுப்புள்ளி வைத்தார். இதன்பிறகே இந்திய அணியின் கை ஆட்டத்தில் ஓங்கியது. முக்கியமான நேரத்தில் கேதர் ஜாதவை பந்து வீச அழைத்தது விராட் கோலியின் கேப்டன்ஷிப் திறமையை வெளிக்கொணருவதாக அமைந்தது. ஆனால், போட்டி நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, கேதர் ஜாதவை பந்து வீச அழைத்தது தான் மட்டும் எடுத்த முடிவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து விராட் கோலி கூறியதாவது: – “ கேதர் ஜாதவை பந்து வீச அழைத்த முடிவுக்கான மொத்த பாராட்டுக்களையும் நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், நானும் தோனியும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்தோம்.கேதர் ஜாதவ் உண்மையாக சிறப்பாக பந்து வீசினார். பாராட்டுக்கள் அவருக்குதான் போய் சேர வேண்டும். வலைப்பயிற்சியின் போது கேதர் ஜாதவ் அதிகம் பந்து வீசியது கிடையாது. ஆனால், அவர் மிகச்சிறந்த வீரர், பேட்ஸ்மேன்களுக்கு எங்கு பிரச்சினை என்பதை அவர் நன்கு அறிந்து இருப்பார். பந்து வீசும் போது ஒரு பேட்ஸ்மேன் போல நினைப்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாக எந்த ஒரு பந்து வீச்சாளருக்கும் பலன் அளிப்பதாக இருக்கும்” என்றார்.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top