web
stats
View Visitor Stats ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிராக கடைசி பந்தில் புனே அணி ‘திரில்’ வெற்றி அரைசதம் அடித்து டோனி அசத்தல் – VethaTV
You are here
Home > விளையாட்டு > Cricket > ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிராக கடைசி பந்தில் புனே அணி ‘திரில்’ வெற்றி அரைசதம் அடித்து டோனி அசத்தல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிராக கடைசி பந்தில் புனே அணி ‘திரில்’ வெற்றி அரைசதம் அடித்து டோனி அசத்தல்


புனே,

10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் புனேயில் நேற்று மாலை நடந்த 24–வது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் – நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத் அணியில் உடநலக்குறைவு காரணமாக யுவராஜ்சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிபுல் ‌ஷர்மா சேர்க்கப்பட்டார். புனே அணியில் ராகுல் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றார். தமிழகத்தை சேர்ந்த 17 வயதான வாஷிங்டன் சுந்தர், 20 ஓவர் போட்டி ஒன்றில் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஐதராபாத் 176 ரன்
‘டாஸ்’ ஜெயித்த புனே கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் ஐதராபாத்தின் இன்னிங்சை தொடங்கினர். இருவரும் புனே அணியின் பந்து வீச்சில் தடுமாறியதால் ரன்வேகம் மெதுவாகவே நகர்ந்தது. ஸ்கோர் 55 ரன்களை (8.1 ஓவர்) எட்டிய போது இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பிரித்தார். ஷிகர் தவான் 30 ரன்களில் (29 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். இந்த ஐ.பி.எல்.–ல் இது தான் மந்தமான 50 ரன் பார்ட்னர்ஷிப்பாகும். அடுத்து இறங்கிய வில்லியம்சன் 21 ரன்னிலும், கேப்டன் டேவிட் வார்னர் 43 ரன்களிலும் (40 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர்.

இதன் பின்னர் ஹென்ரிக்சும், தீபக் ஹூடாவும் இணைந்தனர். இந்த ஜோடி தான் ஸ்கோரை துரிதமாக உயர்த்தியது. சில சிக்சர்களையும் பறக்க விட்ட இவர்கள் கடைசி 4 ஓவர்களில் மட்டும் 54 ரன்களை கொண்டு வந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 55 ரன்களுடனும் (28 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), தீபக் ஹூடா 19 ரன்களுடனும் (10 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும் 3 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டினார்.

திரிபாதி அரைசதம்
பின்னர் 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய புனே அணிக்கு திருப்திகரமாக தொடக்கம் கிடைக்கவில்லை. ரஹானே 2 ரன்னில் வீழ்ந்தார். 2–வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்டீவன் சுமித் களம் புகுந்தார். மற்றொரு தொடக்க வீரர் ராகுல் திரிபாதியும், சுமித்தும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சித்தார்த் கவுலின் ஓவரில் திரிபாதி 2 சிக்சர் அடிக்க, ஸ்டீவன் சுமித் தனது பங்குக்கு பிபுல் ‌ஷர்மாவின் ஓவரில் இரண்டு சிக்சர் தூக்கி ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

ஸ்கோர் 87 ரன்களாக உயர்ந்த போது ஸ்டீவன் சுமித் (27 ரன், 21 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ரஷித்கானின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் முறையாக அரைசதத்தை கடந்த மராட்டியத்தை சேர்ந்த 26 வயதான ராகுல் திரிபாதி துரதிர்ஷ்டவசமாக 59 ரன்களில் (41 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்–அவுட் ஆனார்.

டோனி மிரட்டல்
இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனியும், பென் ஸ்டோக்சும் கைகோர்த்தனர். எதிர்பார்த்த ஸ்டோக்ஸ் (10 ரன்) சோபிக்கவில்லை. அதே நேரத்தில் டோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் பேட்டை சுழட்டினார். அவருக்கு மனோஜ் திவாரி நன்கு ஒத்துழைப்பு தந்தார்.

கடைசி 3 ஓவர்களில் புனேயின் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டன. முகமது சிராஜின் 18–வது ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. 19–வது ஓவரை ‘ஸ்விங் சூறாவளி’ புவனேஷ்வர்குமார் வீசினார். யுக்திகளை மாற்றி விதவிதமாக பந்து போட்ட போதிலும், அவரது பந்து வீச்சை நொறுக்கியெடுத்த டோனி 2 பவுண்டரியும், ஒரு சிக்சரும் விரட்டினார். இந்த ஓவரில் 19 ரன்கள் வந்தது. அத்துடன் டோனி அரைசதத்தையும் தாண்டினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான 20–வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய மனோஜ் திவாரி 2–வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3–வது பந்தில் டோனி ஒரு ரன்னும், 4–வது பந்தில் திவாரி ஒரு ரன்னும் எடுத்தனர். 5–வது பந்தில் 2 ரன் கிட்டியது.

கடைசி பந்தில் வெற்றிக்கனி
இதையடுத்து கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. களத்தில் உச்சக்கட்ட டென்‌ஷன் நிலவியது. என்ன ஆகுமோ? என்று ரசிகர்கள் திகிலோடு டோனி மீது பார்வையை செலுத்தினர். ஐதராபாத் கேப்டன் வார்னர் பீல்டிங்கில் சில மாற்றங்களை அமைத்தார்.

ஆனால் சிறிதும் பதற்றமடையாத அனுபவசாலி டோனி கடைசி பந்தை ‘எக்ஸ்டிரா கவர்’ திசையில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை இனிமையாக நிறைவு செய்தார். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் ஜாம்பவான் என்பதை அவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்.

புனே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. கடைசி பந்தில் ஒரு அணி இலக்கை எட்டுவது இது 22–வது நிகழ்வாகும். டோனி 61 ரன்களுடன் (34 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். ஐதராபாத்துக்கு எதிராக 175 ரன்களுக்கு மேலான இலக்கை ஒரு அணி சேசிங் செய்வது இது 3–வது முறையாகும்.

6–வது ஆட்டத்தில் ஆடிய புனே அணிக்கு இது 3–வது வெற்றியாகும். அதே சமயம் 6–வது ஆட்டத்தில் ஆடிய ஐதாபாத்துக்கு 3–வது தோல்வியாகும். மூன்று தோல்வியும் வெளியூர் மைதானங்களிலேயே நடந்து இருக்கிறது.

ஸ்கோர் போர்டுஐதராபாத் சன்ரைசர்ஸ்

வார்னர் (பி) உனட்கட் 43

தவான் (சி) திரிபாதி (பி) தாஹிர் 30

வில்லியம்சன் எல்.பி.டபிள்யூ (பி) கிறிஸ்டியன் 21

ஹென்ரிக்ஸ் (நாட்–அவுட்) 55

தீபக் ஹூடா (நாட்–அவுட்) 19

எக்ஸ்டிரா 8

மொத்தம் (20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 176

விக்கெட் வீழ்ச்சி: 1–55, 2–84, 3–129

பந்து வீச்சு விவரம்

உனட்கட் 4–0–41–1

வாஷிங்டன் சுந்தர் 3–0–19–0

பென் ஸ்டோக்ஸ் 2–0–19–0

‌ஷர்துல் தாகுர் 4–0–50–0

டேனியல் கிறிஸ்டியன் 4–0–20–1

இம்ரான் தாஹிர் 3–0–23–1

புனே சூப்பர் ஜெயன்ட்

ரஹானே (சி) கவுல் (பி) பிபுல் ‌ஷர்மா 2

திரிபாதி (ரன்–அவுட்) 59

ஸ்டீவன் சுமித் (பி) ரஷித்கான் 27

டோனி (நாட்–அவுட்) 61

ஸ்டோக்ஸ் (சி) சப் (சங்கர்) (பி) புவனேஷ்வர் 10

மனோஜ் திவாரி (நாட்–அவுட்) 17

எக்ஸ்டிரா 3

மொத்தம் (20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 179

விக்கெட் வீழ்ச்சி: 1–15, 2–87, 3–98, 4–121

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 4–0–39–1

பிபுல் ‌ஷர்மா 4–0–30–1

முகமது சிராஜ் 4–0–42–0

சித்தார்த் கவுல் 3–0–45–0

ரஷித்கான் 4–0–17–1

ஹென்ரிக்ஸ் 1–0–4–0

––

நழுவிய கேட்ச்சுகள்

புனே வீரர் திரிபாதி 17 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை ஐதராபாத் வீரர் பிபுல் ‌ஷர்மா வீணடித்தார். இதே போல் டோனி 23 ரன்களில் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை தீபக் ஹூடா தவற விட்டார். கண்டம் தப்பிய இருவரும் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். ஐதராபாத்தின் மோசமான பீல்டிங்கே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top